teachers strike

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால், 9 நாட்களாக பல அரசுப் பள்ளி வகுப்புகள் பாதிக்கப்பட்டன. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும், மாதிரி தேர்வுகளும் பல பள்ளிகளில் சரியாக நடைபெறவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தேவைக்கு ஏற்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றியும் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு ஊழியர்களுக்காக, நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, அமல்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு ஊழியரும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை, 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் – சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் போராட்டம் நேற்று 7-வது நாளை எட்டிய நிலையில், இன்று காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏராளமானோர் பணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் 80%, திருச்சியில் 90%, கடலூரில் 60% ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள் மறுபடி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த பின்னரே பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.