2019 Lok Sabha Election

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே எனது ஆதரவு தமிமுன் அன்சாரி பேச்சு

Election 2019: கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை தேர்தலில் பாமகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். மேலும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவு காங்கிரஸ் கூட்டணிக்கு எனவும் மதச்சார்பற்ற அணிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ் அமைப்புகளுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிலும் பெண்களுக்கு 20 தொகுதிகள் ஓதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது தற்போது வரவேற்க பட்டாலும் தேர்தலில் எப்படிபட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெண் வேட்பாளரை களமிறக்கியும் வாக்கு ரீதியான வெற்றி கிடைக்கவில்லை.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது

கடந்த மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை தனித்து நின்று வென்றது அதிமுக, அதற்கு அவர்களது தேர்தல் அறிக்கையும் ஒரு காரணம். கச்சத்தீவில் இருந்து மீனவர் நலன், மாணவர் நலன் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன. அதுபோல வரும் மக்களவை தேர்தலிலும் சிறப்பான வெற்றியை நோக்கி அந்த கட்சியின் ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதற்காக குழு ஒன்றை அறிவித்துள்ளனர். அதில் மூத்த கட்சி நிர்வாகிகளான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன்,அமைச்சர் ஜெயக்குமார், சண்முகம், மனோஜ் பாண்டியன், மற்றும் முன்னால் எம்.பி ரவி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம் – பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். “தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம். கூட்டணி தொடர்பான அறிவிப்பை அ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அறிவிப்போம்” என்று துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக தனித்து போட்டியிடும் சூழல்தான் தற்போது உள்ளது – செல்லூர் ராஜு அதிரடி

மே மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக உள்ளனர். தமிழகத்தை பொருத்த வரையில் பாஜக-அதிமுக கூட்டணி அமையும் என்றே பரவலாக பேசபடுகிறது. அது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்றைய சூழலில் நாற்பது தொகுதியிலும் தனித்து போட்டி என்ற நிலைதான் தொடர்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெற்றி பெறுவதற்கான வியுகங்களை எடுக்கும் என்றார்

கீழே விழுந்த புகைப்பட கலைஞருக்கு ஓடிச்சென்று உதவிய ராகுல் காந்தி, டுவிட்டரில் பாராட்டு

ஒடிசாவில் இன்று 2019 தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக தொடங்கியுள்ளார். புவனேஷ்வர் விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பின்னால் படிகள் இருப்பதை பார்க்காமல் பின்னால் சென்ற வண்ணமே புகைப்படம் எடுத்தபடி, எதிர்பாராத விதமாக தலைகீழாக விழுந்தார். இதை பார்த்து ராகுல் காந்தி உடனடியாக ஓடிச்சென்று அவர் தூக்கி விட்டார். அவருடைய மனிதாபிமான பணியை பாராட்டி பலரும் டுவிட்டரில் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியினர் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்

மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான 272 இடங்கள் கிடைக்காது: கருத்து கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரிபப்ளிக் டி.வி. மற்றும் ‘சி’ ஓட்டர்ஸ், இந்தியா டுடே, ஏ.பி.பி. மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பலம் மற்றும் வெற்றி பெறும் தொகுதி குறித்து கருத்து கணிப்பு நடத்தியுள்ளன. இந்த கருத்து கணிப்பு முடிவுகளின் படி, மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான இடங்கள், அதாவது 272 தொகுதிகள் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சமூக ஊடகங்களில் மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என்பது போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இத்தகைய செய்திகளைப் பரப்பும் முகம் அறியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தவும், வதந்திகளைப் பரப்புவோரை தண்டிக்க சட்டங்களை பயன்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.