Today news in India

மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – கைலாஷ் விஜய்வர்ஜியா

சாரதா சிட்பண்ட் விவகாரம் குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்றதை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா, மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக மம்தா பதவி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட் பிரச்சினை விசாரணைக்கு மாநில அரசும் போலீசாரும் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் எனக் கூறினார்.

கோவா முதல்வர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடம்

கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பாரிக்கருக்கு உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக அம்மாநிலத்தின் துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் பாரிக்கர் தொடர் சிகிச்சையில் உள்ளார் .கடந்த 30 ஆம் தேதி மூக்கில் குழாய் மாட்டியதோடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்க பட்டுள்ளார். தற்போது கோவா முதலமைச்சர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக துணை சபாநாயகர்
கூறியுள்ளார்.

சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு, ஒரு முழுப்பார்வை.

Saradha Chit Fund Scam Case: சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ சி பி ஐ அதிகாரிகளின் செயலை கண்டித்தும் மத்தியில் ஆளும் பா ஜ க அரசை எதிர்த்தும் அங்கிருக்கும் மெட்ரோ சேனல் பகுதி அருகே நேற்று முன்தினம் முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜீவ் குமாரும் அதில் பங்கேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் அங்கு திரண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல கட்சி தலைவர்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தவாறு உள்ளனர்.

சாரதா சிட் பண்ட் விவகாரம்:

கொல்கத்தாவை சேர்ந்த சுதீப்தா சென் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் மேற்கு வங்கம் மட்டுமின்றி அசாம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்திருந்தனர். இந்த நிலையில், திடீரென்று 2013 ஆம் ஆண்டு சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

பொது மக்களின் பணம் 30,000 கோடி வரை சுருட்டப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பெயரில் தலைமறைவு ஆகியிருந்த சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சாரதா நிறுவன அதிபருக்கு பின்புலமாக திரிணாமுலின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் இருந்துள்ளனர். ராஜ்யசபாவின் திரிணாமுல் எம் பி ஜெய் போஸ், மம்தாவுக்கு விசுவாசமான முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார், மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் மதன் மித்ரா என அடுத்தடுத்து மம்தா ஆட்சியின் முக்கியமான நபர்கள் சாரதா வலையில் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் சாரதா குழுமத்தின் ஆலோசகர்களாக, நிர்வாக உறுப்பினர்களாக, பங்குதாரர்களாக இருந்து பல விதங்களில் உதவி வந்துள்ளனர்.

யார் இந்த ராஜீவ் குமார்?

2014 ஆம் ஆண்டு சி பி ஐ-க்கு மாற்றப்படும் வரை இந்த முறைகேடு சார்ந்த வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் தான் ராஜீவ் குமார். தற்போது இவர் கொல்கத்தாவின் காவல் ஆணையராக இருந்து வருகிறார். சி பி ஐ விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜீக்கு நெருக்கமானவராக வர்ணிக்கப்படும் ராஜீவ் குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்ட சி பி ஐ அதிகாரிகள், அது பற்றி விசாரிக்க அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. பல முறை நேரில் வருமாறு அழைத்தும் அவர் நிராகரித்துவிட்டார். தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

இந்நிலையில்,அவரை நேரில் சென்று விசாரிப்பது என்று முடிவு செய்து சி பி ஐ அதிகாரிகள் 40 பேர்,கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்பொழுது தான் சி பி ஐ அதிகாரிகளை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்காமல் போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஆதரவாக பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை உலகத்தரம் வாய்ந்த அதிகாரி என பாராட்டியதோடு, தனது ஆட்சியை கெடுக்க பா ஜ க திட்டம் தீட்டுவதாகவும் சாடினார்.

இதை அடுத்து, “சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி ராஜீவ் குமாருக்கு உத்தரவிடுமாறு” உச்ச நீதிமன்றத்தில் சி பி ஐ அதிகாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது .

அதே போல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிட் பண்ட் விவகாரத்தில் மேற்குவங்க மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்” அனுப்ப உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. அனால் அதை சி பி ஐ மீறி நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரித்து “சி பி ஐ-க்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

Saradha Chit Fund Scandal: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இரண்டு நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்று காலை சி பி ஐ தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்கில் உள்ள சி பி ஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை; அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Saradha Chit Fund Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

நரேந்திர மோடி ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன் – ஸ்ம்ரிதி இரானி

புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் “நீங்கள் எப்போது பிரதமர் ஆவீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “எனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை. சிறந்த தலைவர்களின் தலைமையின் கீழ் அரசியல் பணி செய்வதே என் விருப்பம். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பார். அவர் ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன்” என்று பி ஜே பி – எம் பி ஸ்ம்ரிதி இரானி கூறியுள்ளார்.

தபால் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் சுமார் 9,000 கோடி ரூபாய்!

ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்காக சிறு தொகைகளை சேமிக்க தபால் நிலையங்களை பயன்படுத்துகின்றனர். இதனிடையே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேர்த்து சுமார் 9,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் இருப்பதாக மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள் ஆன கிசான் விகாஸ் பத்திரம், மாத வருவாய் திட்டம் ,தேசிய சேமிப்பு பத்திரம், PPF, RD உள்ளிட்டவைகளில் இந்த நிதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் ஆகும் #WestBengalWantsPresidentRule

சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் கைது செய்யபட்டதை தொடர்ந்து சி பி ஐ-இன் செயலை எதிர்த்தும் பா ஜா க அரசு தன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற கட்சி தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. ட்விட்டரில் #WestBengalWantsPresidentRule என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி

மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் கொல்கத்தா மாநில முதலைச்சர் மம்தா, மாநில உரிமைகளை தட்டி பறிக்கும் வகையிலும் , மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவதாக குற்றம் சாட்டினார், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் “ மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை என்று பதிவிட்டுள்ளார்.

10 கோடி பேரிடம் கருத்து கேட்கும் பாஜக

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெரும் முனைப்புடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கும் தனி குழுவை அமைத்துள்ளது பாஜக தலைமை. தேர்தல் அறிக்கை தொடர்பாக 10 கோடி மக்களிடம் கருத்து கேட்ட திட்டமிட்டுள்ளனர், இதற்கு இந்தியா முழுவதும் உள்ள 4000 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மக்களை நேரிலும் அல்லது இணையதளம் வாயிலாகவும் கருத்து கேட்ட உள்ளது பாஜக.