Education News

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

கடந்த ஆண்டு பிரதமர் மோடி, மாணவர்கள் தேர்வு எழுதும் போது சந்திக்கும் பிரச்னைகளை களையவும், அவர்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்தியா மட்டுமல்ல ரஷ்யா, நேபாள், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் மாணவர்களும் மோடியுடன் கலந்துரையாடுகின்றனர்.

தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழைத்து வர மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி: யுஜிசி அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (scribes) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவியாளர் ஒருவர் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை தேர்வை நடத்தும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் சார்பாக மட்டுமே உதவியாளர் வழங்கப்பட்டு வந்தார். மேலும், இளநிலை, முதுநிலை பட்டத் தேர்வுகளை எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கும், பத்தாம் வகுப்பு தகுதி பெற்ற உதவியாளர்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் கூறும் சில தொழில்நுட்ப வார்த்தைகளை இந்த உதவியாளர்கள் புரிந்துகொள்ள முடியாத நிலை இருந்து வந்தது.

இதனால், சில மாற்றுத்திறனாளிகள் தேர்வில் தோல்வியடையும் நிலையும் நிலவி வந்தது. இதன் காரணமாக தகுதியுள்ள உதவியாளர்களை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதலை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள யுஜிசி, போட்டித் தேர்வுகளுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளுக்கும் இந்த வழிகாட்டுதலையே பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதில், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்திடம் உதவியாளரைக் கேட்கலாம் அல்லது சொந்த உதவியாளரை தாங்களே அழைத்து வரலாம் என தெரிவித்துள்ளது. அவ்வாறு அழைத்து வரப்படும் சொந்த உதவியாளர், தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளியின் கல்வித் தகுதியைவிட ஒரு படி கீழே இருக்க வேண்டும். மேலும், இந்த உதவியாளர் குறித்த முழு விவரத்தையும் அந்த மாற்றுத்திறனாளி சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.