thoothukudi firing

Sterlite Verdict: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு கடந்து வந்த பாதை

Thoothukudi Sterlite Verdict : கடந்த ஆண்டு மே மாதம் “முத்து நகரம்” என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் போர்க்களமானது. அங்கு இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின்  தாமிர(காப்பர்) உருக்கு  நிறுவனமான ஸ்டெர்லைட்டின் விரிவாக்கத்தை எதிர்த்தும் அதை  நிரந்தரமாக மூட கூறியும்  மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் மாசு மற்றும் சுத்தீகரிக்கப்படாத கழிவு நீரால் கேன்சர் உருவாகிறது, அங்கு வேலை செய்பவர்களுக்கு முறையான தற்காப்பு வசதிகள் இல்லை, கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் அரசின் சட்ட திட்டங்கள் மீறப்படுகிறது என்று பொது மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அதனை முற்றிலுமாக மறுத்த வேதாந்தா குழுமம், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும் அதனால் மக்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் கூறியது.

Journey of Sterlite Plant: ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை

ஆனால் மக்கள் அதை  ஏற்றுக் கொள்ளவில்லை. 100 நாட்களையும் தாண்டி இரவு பகல் பாராமல் போராட்டம் தொடர்ந்தது. நிலைமை நாளுக்கு நாள் கை மீறி போக, தமிழக அரசு தலையிட்டு போராட்டத்திற்கு தடை விதித்தது. சில இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது பொது மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்த, சமூக வலைத்தளங்களில் வேதாந்த குழுமத்திற்கும் அரசிற்கும் எதிராக பெருமளவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசு விதித்த தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட நடத்தப்பட்ட போராட்டத்தில் திடீர் கலவரம் வெடிக்க, போலீசாருக்கும் பொது மக்களுக்கும் நடந்த சண்டையில் போராட்டக்காரர்கள் 13 பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர், 102-க்கும்  மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் மட்டும் அல்லாது வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.

வேறு வலி இல்லாமல் மே 22,2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர்.

தமிழக அரசின் தடையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. அதனை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அவர்கள் அளித்த அறிக்கையின் பெயரில் சில நிபந்தனைகளுடன் வேதாந்தா குழுமம் மீண்டும் ஆலையை திறக்கலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Tuticorin People welcomes Supreme Court order against reopening of Sterlite

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை  மூடப்பட்ட நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், ஒருபுறம், உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் ஆலையை திறக்க தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மறுபுறம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு செய்தது.

இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை நடந்து கொண்டு இருக்கையில், அதற்கிடையே, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆலை பராமரிப்பு பணிக்கு மின்இணைப்பு வழங்க வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியது. இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பதால், பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது  எனவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்றும் கூறி, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை தமிழ்நாடு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த பொழுது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்காமல், ஆலையை திறக்கக் கூடாது என்று உயர் நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 29 ஆம் தேதி வழங்கப்படுமெனவும் கூறியது. ஆனாலும் ஆலையை திறக்கவும் மின்சாரம் வழங்கவும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

Journey of Sterlite Plant: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு கடந்து வந்த பாதை

ஜனவரி 29 ஆம் தேதி விசாரணையின் பொழுது இரண்டு தரப்பிலிருந்தும் அனல் பறக்கும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் மீதான விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இந்த வழக்கு சார்ந்த அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேற்கூறிய இரண்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்குகளை விசாரித்து உத்தரவிட பசுமை தீர்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் ஆலையை திறக்க விதித்த தடை செல்லும் என உத்தரவிடப்பட்டது. மேலும், இது தொடர்பாக இடைக்கால நிவாரணம் தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தூத்துக்குடி வாழ் மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் மக்கள் தங்களுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Journey of Sterlite Plant: ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை

Sterlite Supreme Court Verdict: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை…!

Sterlite Supreme Court Verdict: :ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்பாயத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Sterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?- நாளை தீர்ப்பு

Thoothukudi Sterlite Verdict : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்ட பின் அதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தீவிர ஆய்வுகளுக்கு பிறகு ஆலையை திறக்கலாம் என்றும் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. வேதாந்தா நிறுவனம் சார்பிலும் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் நாளை தீர்ப்பு வழங்க பட உள்ளது.