Lok Sabha Election 2019 Tamil Nadu Updates

Lok Sabha Election 2019 Tamil Nadu News & Updates

40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி

மக்களவைத் தேர்தலில் இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என வைகோ கணித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் நானும் என் கழகத் தோழர்களும் பிரச்சாரம் செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக தயார்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. அந்த 4 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பதே இழுபறிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தரவும் அதிமுக தயாராக உள்ளதாக தகவல்.

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ்க்கு அழைப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இன்று கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்வு சென்னை வண்டலூர் அருகே நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அழைக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வரவேற்றனர். ஆகையால் இன்றைய நிகழ்வில் ராமதாஸ் அவர்கள் நிச்சயம் பங்கேற்ப்பார் என தகவல் வெளியாகியுள்ளன.

சிதம்பரம் தொகுதியை கேட்கும் காங்கிரஸ்

DMK-Congress Alliances: திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சார்பில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தருணத்தில் யாருக்கு எந்த தொகுதி என்ற ஆலோசனையும் துவங்கியுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியை பல மாதங்களுக்கு முன்னதாகவே திருமாவளவன் கேட்டு வருகிறார். மேலும் 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களிலும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. திமுக தலைமை யாருக்கு அந்த தொகுதியை ஒதுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்று அறிவிக்கப்படுகிறது தேமுதிக அதிமுக கூட்டணி

DMDK: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிச்சயம் இணையும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்றது அதில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இன்று நிச்சயம் அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. தேமுதிகவிற்கு ஐந்து முதல் ஆறு தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்

DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி

DMK-MDMK Alliances: திமுக கூட்டணியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். மறுமலர்ச்சி திராவிட கழகம் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

20 இடங்களில் போட்டியிடும் திமுக

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி வருகிறது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு போக தனக்கென திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை விட்டுகொடுக்கும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கபட்டன. ஆனால் 8 இல் மட்டுமே காங்கிரஸ் வேற்றி பெற்றது. இதே நிலைமை தற்போதும் நடந்துவிடுமோ என சிலர் அஞ்சுகின்றனர்.

நாளை சென்னை வருகிறார் மோடி

Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி -ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் வருகின்ற 21வது சட்டமன்ற தேர்தலிலும் புதிய நீதி கட்சி அதிமுக ஆதரவு நிலைபாடு எடுக்கும் என தெரிகிறது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் அக்கட்சியின் தலைவர் சண்முகம் போட்டியிடுவார் என தெரிகிறது.

புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்துள்ளார். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியே போட்டியிடுவார் என தெரிகிறது. இதுவரை 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுத்துள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா போட்டி?

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும் 2009 மக்களவைத் தேர்தலிலும் ஆ ராசா நீலகிரியில் தான் போட்டியிட்டார். 2009இல் மகத்தான வெற்றியை பதிவு செய்திருந்தார். அதேபோல் 2014லிலும் நீலகிரி தொகுதியில் தான் போட்டியிட்டடார். ஆனால் அப்போது வெற்றி கிட்டவில்லை. இம்முறையும் ஆ ராசா நீலகிரி தொகுதியில் தான் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தொகுதி பங்கீட்டில் திணறுகிறதா அதிமுக?

AIADMK-DMDK: மக்களவை தேர்தலை கூட்டணியோடு சந்திக்கும் வகையில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வருகிறது, இதுவரை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், என்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக அறிவித்து வருகிறது, பாஜகவுக்கு 7 தொகுதிகள், பாமகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகத்துக்கு 1 தொகுதி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கூட்டணி கட்சிகளுக்கு போக தற்போது மீதம் 26 தொகுதிகள் அவர்கள் வசம் உள்ளன.

நிர்பந்திக்கும் தேமுதிக

அதிமுக கூட்டணியில் நிச்சயம் தேமுதிக இணையும் என பாஜக, அதிமுக கட்சி பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக சார்பாக துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர், இருப்பினும் தேமுதிக கூட்டணி உடன்பாடு எட்டப்பட வில்லை. இதற்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருவதே காரணம் என கூறப்படுகிறது. பாமகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாக தகவல்.

சமரசம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக

தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவும் பாஜவும் ஒருமித்த குரலை வெளிபடுத்துகிறது, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதே ஒரே வழி, தற்போது அதிமுக வசம் 26 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுகிறது அதிமுக, ஒரு வேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் சொந்த கட்சி தொண்டர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளதாகவும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதே அதிமுகவின் கருத்து.

6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு?

நிறைவாக தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மோடி தலைமையில் மாபெரும் மாநாடு!

வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறுகிறது, அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார், மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தேமுதிக இணைந்துவிட்டால் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த கூட்டணிக்கு மக்கள் எத்தணை தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்.

விஜயகாந்த்-ஓபிஸ் சந்திப்பு

OPS-Vijayakanth: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வந்தன, ஆனால் தேமுதிக-அதிமுக கூட்டணி சேருவதில் தொடர் இழுபறி நீடிக்கிறது, இந்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க துணை முதலமைச்சர் ஓபிஸ் தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து பேசினார், இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமாரும் உடனிருந்தார். பின்னர் பேசிய ஓபிஸ், கூட்டணி குறித்து இன்றோ நாளையோ நல்ல செய்தி வரும் என்றார்.

தொகுதிகளை வாரிவழங்கும் திமுக…

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்த வரை ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது, அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன, அதோடு சில அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அள்ளி கொடுத்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கியதுவம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது காங்கிரஸ் கட்சிதான், இது தேசிய கட்சி, மத்தியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி, இம்முறை அவர்கள் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்தே தொடர்கிறது, மேலும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விசிகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், எனவும் எங்கள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கபட வேண்டும், அதிலும் நானே போட்டியிடுவேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், இந்த கோரிக்கையை திமுக ஏற்கும் என எதிர்பார்த்த நிலையில், அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதியையும் திமுக வழங்கியுள்ளது, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை விசிக கேட்கும் என தெரிகிறது, விசிக தொண்டர்கள் நம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிக்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பது தொண்டர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுகவின் தோழமை கட்சிகளாக விளங்கிய மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை தர முன்வந்துள்ளது, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?

கூட்டணி அமைத்தால் தேர்தலை சந்திப்பதை விட தொகுதி பங்கீடுவது தான் சவாலாக இருக்கும், அதே நிலைதான் தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது, மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், போன்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகளையும், மேலும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும், அந்த வகையில் ஏற்கனவே 19 தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது திமுக, மேலும் ஐஜேகே போன்ற கட்சிகளும் உள்ளனர், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தால் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

கருணாநிதி அவர்கள் இருந்த போதே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டு 16 தொகுதிகளில் மட்டுமெ திமுக நின்றது, இருப்பினும் தற்போதைய சூழலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சரியாக கையாண்டுள்ளாரா என்பதே மீதமுள்ள கதை.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டி

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவை தொகுதியில் திமுக மகளிரணி செயலரும், ராஜ்ய சபா எம்,பியுமான கனிமொழி நிச்சயம் போட்டியிடுவார் என்ற தகவல் சமீப காலங்களில் பேசப்பட்டு வந்தது, அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக பிரதிநிதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை கட்சி தலைமைக்கு கனிமொழி அளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர், அதன் மூலம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மதிமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு

DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு திமுக வழங்கி வருகிறது, அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மதிமுகவிற்கும் இரண்டு தொகுதிகள் தான் வழங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. திமுகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மறுமலர்ச்சி திராவிட கழக பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

எந்த தொகுதியிலும் போட்டியிட தயார், தமிழிசை பேச்சு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது. பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை “எந்த தொகுதியாக இருந்தாலும் நான் போட்டியிட தயார்”, அது எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ராமதாஸ் கணிப்பு

Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இடம்பெற்றுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் எங்கள் கூட்டணிக்கு இணைவார்கள் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வேளையில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு

BJP AIADMK PMK alliance 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார். எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது எனவும் , 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாகவும் , அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

வைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து

MDMK தமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார். அண்மையில் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சென்ற அவர் வரும் மக்களவைத் தேர்தலில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

பாமக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் வன்னியர் சங்க தலைவர் பேட்டி

Elections 2019: அகில இந்திய வன்னியர் சங்கத்தலைவர் ஜெய ஹரி அன்புமணி ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.அதிமுக பாமக பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திப்பது நிச்சயம் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிமுக சின்னத்தில் போட்டியிட தயார் பாரிவேந்தர் அறிவிப்பு

Elections 2019: மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாரிவேந்தர் தற்போது பாஜக எங்களை அழைத்தால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டால் அதிமுகவின் சின்னத்திலும் நாங்கள் நிற்க தயார் என தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்தக் கூட்டணி சரிவராத பட்சத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

திமுகவின் தோழமைக் கட்சிகளும் எங்களோடு பேசுகிறார்கள் ஜெயக்குமார் தகவல்

Elections 2019: மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேரவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாகவும் குறிப்பாக திமுக தலைமையில் இருக்கும் சில கட்சிகளே எங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே அமைச்சர் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்தார்.

அதிமுக ரயில் டெல்லி செல்கிறது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

AIADMK: அதிமுக என்னும் ரயில் டெல்லி செல்வதாகவும், விருப்பம் உள்ள கட்சிகள் எங்களோடு சேர்ந்து பயணிக்கலாம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எங்களோடு இணைந்தால் பத்திரமாக டெல்லி செங்கோட்டை செல்லலாம் எனவும் ஏராவிட்டால் இன்ஜின் இல்லாத ரயிலில் தான் ஏற வேண்டும் என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுவரை எந்த கட்சியுடன் கூட்டு சேரா கட்சிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்து உள்ளதாக தெரிகிறது.

பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் விலகல்

PMK: பாமகவின் மாநிலத் துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித் பதவி வகித்து வந்தார். ஆனால் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவோடு கூட்டணி வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஊழல் கட்சி என சொல்லிவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்து உள்ளது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

புயல்வேக பிரச்சாரத்திற்கு வைகோ தயார் ஸ்டாலின் பேச்சு

Lok Sabha Elections 2019: 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய புயல்வேக பயணத்திற்கு வைகோ தயாராகிவிட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கப்படும். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்” 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம் செய்வார்” என்றார்.

கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி

Elections 2019 சென்னையில் நடந்த புதிய தமிழகம் கட்சி பொதுகூட்டத்தில், பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை எந்த கட்சி ஏற்கிறதோ அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சின்ன பையனை வைத்து பேச வேண்டாம்- ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

AIADMK: மக்களவை தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் இணையும் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. சில கட்சிகளை விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகர் கட்சி மேடைகளில் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜேந்திரபாலாஜி சின்ன பையனை வைத்து தேமுதிக பேசவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

DMK Alliances: மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகுதியில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது ராஜேந்திரபாலாஜி

AIADMK: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உரையாற்றினார். அப்போது அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது என தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கட்சியாக இருந்தாலும் பாஜக அதிமுகவை சார்ந்துதான் இருக்கிறது என்ற தொனியில் பேசி இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை இழக்காதீர்கள்- அன்புமணி

Lok Sabha Elections 2019: சென்னையில் இன்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கும் எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை விடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீட் மற்றும் மதுவிலக்கு வேண்டாம் என தொடர் அழுத்தம் கொடுப்போம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் அதற்காக அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையை பாராட்டினார்கள். ஆனால் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனியாக வரும் 15 ஆண்டுகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதனால் தான் வியூகத்தை மாற்றியுள்ளோம்” என கூறினார்.

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை ஜெயக்குமார் பேச்சு

Elections 2019: மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக மாபெரும் கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே பாஜகவும் பாமகவும் இணைந்துள்ளனர்.அதிமுக கட்சி சார்பாக தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வரவில்லை என்றால் கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், பாரிவேந்தர் கூட்டணி அமைக்க வாய்ப்பு

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஒருமித்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமையலாம் என தெரிவித்தார். இந்த நிலையில் எஸ் ஆர் எம் குழும நிறுவனத் தலைவரும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு பாரிவேந்தர் அவர்கள் கமல்ஹாசனோடு இணைந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நாங்கள் தான் தமிழகத்தின் A டீம் – கமல்ஹாசன்

Makkal Needhi Maiam: நெல்லை பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் என்னைப் பார்த்து பாஜகவின் B டீம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நாங்கள் தான் தமிழகத்தின் A டீம். இதில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியிட்ட கமல்ஹாசன் தனது கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு வெளியிட்டார். ஊழலை ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேட்பாளராக வரவேண்டும். நல்லவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் எங்கள் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.

தமிழகத்தை ஆள்வது அல்ல முன்னேற்றுவது எங்கள் நோக்கம், அன்புமணி பேச்சு

Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும், தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கே ஆதரவு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றமே எங்கள் நோக்கம் என்றார் அன்புமணி ராமதாஸ்

இது மக்கள் விரோத கூட்டணி கே.எஸ். அழகிரி தாக்கு

Lok Sabha Elections 2019: தற்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி விமர்சித்துள்ளார். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியே மக்கள் நலன் சார்ந்த கூட்டணி எனவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் மக்கள் நன்மையடைவார்கள் எனவும் கூறியுள்ளார்.

தேமுதிகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை, ஓபிஸ் தகவல்

Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையும் என தெரிகிறது. ஆனால் நீண்ட நாட்களாக இழுபறி நீடிக்கிறது. இதற்கு காரணம் பாமக வுக்கு வழங்கியுள்ளது போல் 7 தொகுதிகளுக்கு மேல் வழங்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓபிஸ் தகவல்.

டிடிவி தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயகுமார்

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தினகரன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டியே தவிர யாரும் எங்களுக்கு போட்டியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 66 கோடி பெண்கள் எங்கள் கட்சிக்கு பின்னணியில் உள்ளார்

Lok Sabha 2019 பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 283 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என தேசிய பெண்கள் கட்சி தலைவர் ஸ்வேதா ஷெட்டி அறிவித்துள்ளார். நாட்டில் உள்ள 66 கோடி பெண்கள் எங்கள் கட்சிக்கு பின்னணியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பாஜகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

Lok Sabha Elections 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது என விமர்சித்தார். மேலும் தேர்தல் வரும் சமயத்தில் தான் பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் ?

Lok Sabha Elections 2019 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார், அந்த வகையில் தமிழகம் வந்த அமித்ஷா, பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசினார், ”தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். பாஜக பொருத்தவரை பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டு பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள்”, அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.

நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு

Lok Sabha 2019 தொல் திருமாவளவன் தகவல் மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதர கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் ”நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

முதல்வர் பழனிச்சாமி, தமிழிசை சந்திப்பு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர், அதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வேளையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திதுள்ளார், இந்த சந்திப்பில் பாஜகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விவாதிக்கபட்டலாம் என தகவல்.

இனி மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் தான் – ஸ்டாலின்

DMK News: திருவேற்காட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், “கடல் தாண்டி ஊழல் செய்யும் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவையும் முதல்வரையும் விமர்சித்து விட்டு பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இனி மற்றம், முன்னேற்றம் வராது.மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் தான் வரும்” என எதிர்கட்சிகளை விமர்சித்துள்ளார்.

தேமுதிகவின் பலம் மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளது

DMDK News: விஜய பிரபாகர், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணி முடிவை அறிவித்து வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் மலர்ந்துள்ளது. இரு கூட்டணிகளும் விஜயகாந்த் எங்களோடு சேர வேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர். அன்மையில் திமுக சார்பாக திருநாவுக்கரசர், ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அதிமுக கூட்டணி சார்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் தேமுதிகவின் பலம் எல்லா கட்சிகளுக்கும் தெரிந்துள்ளது என்றார்.

ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் – முதல்வர் பேச்சு

Tindivanam: மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது. மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியை பெற்று தமிழகத்தின் வளத்தை பெருக்கும் ஒரே ஆட்சி அதிமுகவின் ஆட்சி தான் மேலும் வரும் மக்களவை தேர்தல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி வருகின்றனர் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கமலை விட நாங்கள் மூத்தவர்கள் – சீமான்

Lok Sabha Elections 2019: நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூட்டணி பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். “கூட்டணிக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருப்பது அவரது எதிர்பார்ப்பு, விருப்பம். அரசியல் களத்தில் ஓராண்டு நிறைவு செய்துள்ள அவரை விட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றி வரும் நாங்கள்தான் மூத்தவர்கள். ஆட்சியின் செயற்பாட்டு வரைவை வெளியிட்டு 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுகின்றனர். எனவே அவர்தான் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் ” மேலும் தமிழக மக்கள் பாஜக கூட்டணியை 200% நிராகரிப்பார்கள் நிராகரிக்கவைப்போம். அதற்காகவாவது நாங்கள் தேர்தல் களத்தில் போராடுவோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்றார்.

தினகரன் செய்தியாளர் சந்திப்பு

சற்றுமுன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 38 தொகுதியில் அமுமுக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் பாமக மற்றும் திமுக உடன் கூட்டணி கிடையாது என்றும், கூட்டணி பற்றிய விவரங்களை வரும் 28ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றார். பாமக, திமுகவும் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் எனக் கூறினார்.