Tamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற கனிமொழி

Kanimozhi rushes back

Tamil Nadu DMK News: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக கனிமொழி களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அங்கு தேர்தல் வேலைகளை கவனிக்கவும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் நேற்று மாலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் கட்சி தலைமையிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு வந்த விமானத்திலேயே சென்னை திரும்பிய அவர் பிறகு டெல்லிக்கு விரைந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை ஒரு அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

திமுக சார்பில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு க ஸ்டாலின் கூறியதன் பெயரில் கனிமொழி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் “தீவிரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு உதவியாக தோளோடு தோள் நிற்போம்; நாட்டின் ஒற்றுமையையும் நேர்மையையும் காப்போம்” என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உறுதிமொழி எடுத்தனர்.