ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

Bye-polls-to-18-of-21-legislative-assembly

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.