tamilnadu politics

யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உட்பட சில கட்சிகள் இருக்கின்றன. யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னம் முடக்கம்

நாம் தமிழர் கட்சி இதுவரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது ஆனால் போதிய வாக்கு சதவீதம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், உட்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உடன்பாடு எட்டப் படலாம் எனவும் தெரிகிறது.

சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் நாளை விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர், மேலும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேர்காணல் நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றவுடன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி வேல்முருகன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என நிறுவன தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் அந்த முடிவினை இரு கைவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.

மதிமுவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்க வாய்ப்பு

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதியம் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து மு க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த ஒரு தொகுதியிலும் வைகோ போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகிறது, மாறாக ராஜ்யசபா சீட்டிற்கு வைகோ முயற்சிப்பார் என தெரிகிறது.

40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி

மக்களவைத் தேர்தலில் இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என வைகோ கணித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் நானும் என் கழகத் தோழர்களும் பிரச்சாரம் செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் தொகுதியை கேட்கும் காங்கிரஸ்

DMK-Congress Alliances: திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சார்பில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தருணத்தில் யாருக்கு எந்த தொகுதி என்ற ஆலோசனையும் துவங்கியுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியை பல மாதங்களுக்கு முன்னதாகவே திருமாவளவன் கேட்டு வருகிறார். மேலும் 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களிலும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. திமுக தலைமை யாருக்கு அந்த தொகுதியை ஒதுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்

DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி

DMK-MDMK Alliances: திமுக கூட்டணியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். மறுமலர்ச்சி திராவிட கழகம் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

20 இடங்களில் போட்டியிடும் திமுக

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி வருகிறது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு போக தனக்கென திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை விட்டுகொடுக்கும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கபட்டன. ஆனால் 8 இல் மட்டுமே காங்கிரஸ் வேற்றி பெற்றது. இதே நிலைமை தற்போதும் நடந்துவிடுமோ என சிலர் அஞ்சுகின்றனர்.

நாளை சென்னை வருகிறார் மோடி

Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி -ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் வருகின்ற 21வது சட்டமன்ற தேர்தலிலும் புதிய நீதி கட்சி அதிமுக ஆதரவு நிலைபாடு எடுக்கும் என தெரிகிறது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் அக்கட்சியின் தலைவர் சண்முகம் போட்டியிடுவார் என தெரிகிறது.

புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்துள்ளார். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியே போட்டியிடுவார் என தெரிகிறது. இதுவரை 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுத்துள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா போட்டி?

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும் 2009 மக்களவைத் தேர்தலிலும் ஆ ராசா நீலகிரியில் தான் போட்டியிட்டார். 2009இல் மகத்தான வெற்றியை பதிவு செய்திருந்தார். அதேபோல் 2014லிலும் நீலகிரி தொகுதியில் தான் போட்டியிட்டடார். ஆனால் அப்போது வெற்றி கிட்டவில்லை. இம்முறையும் ஆ ராசா நீலகிரி தொகுதியில் தான் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தொகுதிகளை வாரிவழங்கும் திமுக…

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்த வரை ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது, அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன, அதோடு சில அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அள்ளி கொடுத்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கியதுவம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது காங்கிரஸ் கட்சிதான், இது தேசிய கட்சி, மத்தியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி, இம்முறை அவர்கள் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்தே தொடர்கிறது, மேலும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விசிகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், எனவும் எங்கள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கபட வேண்டும், அதிலும் நானே போட்டியிடுவேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், இந்த கோரிக்கையை திமுக ஏற்கும் என எதிர்பார்த்த நிலையில், அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதியையும் திமுக வழங்கியுள்ளது, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை விசிக கேட்கும் என தெரிகிறது, விசிக தொண்டர்கள் நம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிக்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பது தொண்டர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுகவின் தோழமை கட்சிகளாக விளங்கிய மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை தர முன்வந்துள்ளது, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?

கூட்டணி அமைத்தால் தேர்தலை சந்திப்பதை விட தொகுதி பங்கீடுவது தான் சவாலாக இருக்கும், அதே நிலைதான் தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது, மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், போன்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகளையும், மேலும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும், அந்த வகையில் ஏற்கனவே 19 தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது திமுக, மேலும் ஐஜேகே போன்ற கட்சிகளும் உள்ளனர், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தால் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

கருணாநிதி அவர்கள் இருந்த போதே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டு 16 தொகுதிகளில் மட்டுமெ திமுக நின்றது, இருப்பினும் தற்போதைய சூழலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சரியாக கையாண்டுள்ளாரா என்பதே மீதமுள்ள கதை.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டி

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவை தொகுதியில் திமுக மகளிரணி செயலரும், ராஜ்ய சபா எம்,பியுமான கனிமொழி நிச்சயம் போட்டியிடுவார் என்ற தகவல் சமீப காலங்களில் பேசப்பட்டு வந்தது, அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக பிரதிநிதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை கட்சி தலைமைக்கு கனிமொழி அளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர், அதன் மூலம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மதிமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு

DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு திமுக வழங்கி வருகிறது, அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மதிமுகவிற்கும் இரண்டு தொகுதிகள் தான் வழங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. திமுகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மறுமலர்ச்சி திராவிட கழக பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

பாமக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் வன்னியர் சங்க தலைவர் பேட்டி

Elections 2019: அகில இந்திய வன்னியர் சங்கத்தலைவர் ஜெய ஹரி அன்புமணி ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.அதிமுக பாமக பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திப்பது நிச்சயம் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிமுக சின்னத்தில் போட்டியிட தயார் பாரிவேந்தர் அறிவிப்பு

Elections 2019: மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாரிவேந்தர் தற்போது பாஜக எங்களை அழைத்தால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டால் அதிமுகவின் சின்னத்திலும் நாங்கள் நிற்க தயார் என தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்தக் கூட்டணி சரிவராத பட்சத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

திமுகவின் தோழமைக் கட்சிகளும் எங்களோடு பேசுகிறார்கள் ஜெயக்குமார் தகவல்

Elections 2019: மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேரவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாகவும் குறிப்பாக திமுக தலைமையில் இருக்கும் சில கட்சிகளே எங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே அமைச்சர் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்தார்.

பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் விலகல்

PMK: பாமகவின் மாநிலத் துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித் பதவி வகித்து வந்தார். ஆனால் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவோடு கூட்டணி வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஊழல் கட்சி என சொல்லிவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்து உள்ளது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

புயல்வேக பிரச்சாரத்திற்கு வைகோ தயார் ஸ்டாலின் பேச்சு

Lok Sabha Elections 2019: 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய புயல்வேக பயணத்திற்கு வைகோ தயாராகிவிட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கப்படும். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்” 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம் செய்வார்” என்றார்.

கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி

Elections 2019 சென்னையில் நடந்த புதிய தமிழகம் கட்சி பொதுகூட்டத்தில், பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை எந்த கட்சி ஏற்கிறதோ அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சின்ன பையனை வைத்து பேச வேண்டாம்- ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

AIADMK: மக்களவை தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் இணையும் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. சில கட்சிகளை விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகர் கட்சி மேடைகளில் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜேந்திரபாலாஜி சின்ன பையனை வைத்து தேமுதிக பேசவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

DMK Alliances: மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகுதியில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

தேமுதிக யார் பக்கம் ? பரபரப்பான அரசியல் களம்

Lok Sabha 2019 Elections: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட ஆரம்பித்து விட்டனர், ஆனால் தேமுதிக இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூட வெளியிடவில்லை. தேமுதிக அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் என்றே கூறப்பட்டது, பாஜக, பாமக கூட்டணி அறிவிக்கபட்ட அதே நாளில் தேமுதிக கூட்டணியும் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கபட்டது ஆனால் அன்று தேமுதிகவுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட வில்லை, விஜயகாந்த் வீட்டிற்க்கு சென்ற மத்திய அமைச்சர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நட்த்தினார், ஆனால் தேமுதிக சார்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தெரிகிறது, அதில் பாமாகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது, ஆனால் அதனை அதிமுக ஏற்று கொள்ள தயாராக இல்லை. மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் ஏற்கனவே 12 தொகுதிகளை பாமகவுக்கும் பாஜகவுக்கும் கொடுக்கப்பட்டு விட்ட்து, மேலும் 7 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்தால், அதிமுகவுக்கு 21 தொகுதிகளாக குறையும், மேலும் தாமாக போன்ற கட்சிகள் வரும் சூழலில் அவர்களுக்கும் ஒரு சில தொகுதிகளில் ஒதுக்கபட வேண்டும்,

இறுதியில் அதிமுகவிற்க்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும், இதனை கருத்தில் கொண்டே அதிமுக அதிக தொகுதிகளே கொடுக்க மறுக்கிறது. அதிமுக தொண்டர்களும் இதனை விரும்ப மாட்டார்கள்,,

அதிமுக நிச்சயமாக குறைந்த பட்சம் 23 தொகுதிகளில் போட்டியிடும், அப்படியென்றால் இன்னும் 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுதரும் என தெரிகிறது.

திமுக கூட்டணிக்கு செல்லுமா தேமுதிக ?

பிப்ரவரி 21 காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுகரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்தார், அப்போது அவரது உடநலம் குறித்து விசாரிக்க வந்தேன், மேலும் தமிழக அரசியல் குறித்தும் பேசினோம் என்றார். நிச்சயம் திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவே விஜயகாந்தை சந்தித்தார் என அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திமுக பொருத்துவரை 10 தொகுதிகளை காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளது, மேலும் அவர்களிடம் 30 தொகுதிகள் உள்ளது, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் கோரிக்கை ஒரிரு தொகுதிகள் மட்டுமே ஆக தேமுதிக ஒரு வேளை கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு ஐந்து தொகுதிகள் வரை இதுக்கப்பட வாய்ப்புள்ளது.

முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தேமுதிக

தேமுதிவுக்கு இரு கூட்டணிகளும் அழைப்பு விடுக்கபட்டுள்ளது, எந்த கட்சி அதிக தொகுதிகளை தர தயாரா உள்ளதோ அங்கு தேமுதிக செல்லும் என சிலர் சொல்லப் படுகிறது.

தேமுதிகவின் நோக்கம்

தேமுதிக தமது கட்சியை பலப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது, கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது ஆகவே மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்க தேமுதிக முயல்கிறது. அதற்கு ஒரே வழி பலம் பொருந்திய கட்சிகளோடு கூட்டணி வைத்து வெல்லவதே ஒரே வழி…

கமல் மக்கள் நீதி மய்யம் மூலம் ஒரு ஆண்டு காலம் சாதித்தது என்ன?

Makkal Neethi Maiam: எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பிறகு சினமா துறையில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைப்பது கமல் என்னும் மாபெரும் நடிகனே. சினிமா துறையில் பல நடிகர்கள் தன்னுடைய அரசியல் விசிட்டை இப்பொழுது அப்பொழுது என்று இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் கமல் அதிரடியாக பிப்ரவரி 21 2018 அன்று மதுரையில் தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கினார்.

பொதுவாக ஜெயலலிதாவிற்கு அடுத்து எந்த நடிகர் அரசியலுக்கு வர முயற்சித்தாலும் அவர்கள் சந்திக்கும் கேள்விகள் பல “அரசியலுக்கு வந்திங்கனா விஜயகாந்த் மாறி ஆகிடுவீங்க, கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிட முடியாது. நீங்க சினிமாவுல அரசியல் பேசறதோட நிறுத்திக்கோங்க” இதே போல் பல கேள்விகளை தினசரி சந்திப்பது உண்டு. இதையெல்லாம் தாண்டி கமல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு வருடத்தை கடந்துள்ளார்.

ஆரம்பித்த ஒரு வருடத்தில் 8 லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் பதிவு செய்துள்ளனர். அதை தவிர்த்து மகளிர் அணி, மாற்று திறனாளிகளுக்கான அணி என ஒவ்வொரு துறைக்கும் தலைவர்களும், மாநில வாரியான பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.

சரி, தன்னுடைய ஒரு ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எந்த மாதிரியான சாதனையை கமல் செய்துள்ளார் என்பதை சிறிதளவு பார்ப்போம்.

பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கியதும் மாதம் முழுவதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை, மக்களை சந்திப்பது, மாணவர்களை கல்லூரியில் சந்திப்பது என கட்சியை வலுப்படுத்துவதற்கான முழு வேலையை செய்தார்.

மார்ச் மாதம் தன் கட்சி உறுப்பினர்களுக்கான பணி நியமனம், மகளிர் அணியை வலுப்படுத்துதல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உழவன் விருதுகள் நிகழ்வில் பங்கேற்றார்.

ஏப்ரல் மாதத்தில் கிராம சபை கூட்டதிற்கான முழு வேலைகளிலும் ஈடுபட்டார். பின் விசில் என்ற செயலியையும்
அறிமுகப்படுத்தி, இதில் மக்கள் தங்களுடைய எல்லாவிதமான பிரச்சனைகளை பற்றியும் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்தார்.

மே மாதம் தமிழ்நாட்டேயே அதிர்ச்சி அடைய செய்த தூத்துக்குடி துப்பாக்கிச் சுட்டில் நடந்தவைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்வையிட்டார். அதன் பின் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பிலும் கலந்துகொண்டு காவேரி பிரச்சனையை பற்றி குமாரசுவாமியிடம் முறையிட்டார்.

ஆகஸ்ட் மாதம் கலியாப்பூண்டி, செங்கட்டூர் பாக்கம், நாமிழஞ்சேரி, தீந்துபாளையம் போன்ற பல மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தை அவர்களுடைய கட்சி தொண்டர்கள் மூலம் நடத்தினார். அதே சமயம் கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் பற்றிய பட்டியலையும் வெளியிட்டு உடனடியாக செப்டம்பர் மாதத்தில் மாநில உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டரையம் நடத்தினார்.

நவம்பர் மாதம் தஞ்சை மாவட்டத்தினுடைய மாபெரும் கஜா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஜனவரி அன்று ஊர்மக்களுக்கு தன்னலம் இன்றி சேவை செய்பவர்களுக்கான சான்றோர் விருதுகளை தன் கட்சியின் மூலம் சிறந்த 11 நபர்களுக்கு கடலூரில் வழங்கினார். தன்னுடைய புதுச்சேரி அமைப்பையும் தொடங்கினார்.

இப்படி ஒரு ஆண்டுக்கான பணிகளை கமல் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மூலம் செய்துள்ளார்.

இந்த ஒரு ஆண்டு காலத்தில் அவர் செய்த விஷயங்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஒவ்வொரு மக்களுக்குமே தங்களுடைய பகுதி பிரச்சனைகளை தீர்மானித்து அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டியது அவசியம் என்பதை கிராம சபைக்கான விழிப்புணர்வு மூலம் மக்களுக்கு
கொண்டு சென்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்புகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே அவர்களுடைய வாழ்க்கை போக்கின் வெற்றி, மற்றும் சமூக அக்கறையை கண்டுதான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக கூறியுள்ளார். ஊழல் கட்சிகளிடம் கூட்டணி ஒருபோதும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.

வலதும் இல்லாமல் இடதும் இல்லாமல் மய்யமாக பயணித்து கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய மக்களவை தேர்தல் ஆட்டத்தை மக்கள் காண காத்துகொண்டு இருக்கின்றனர்.