Lok Sabha Elections

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

Lok Sabha Elections 2019: மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக , காங்கிரஸ் சிபிஎம்,சிபிஐ,பாஜக உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி

லக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார். பா.ஜ.க அரசு, தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், ஏழை எளிய மக்களை ஆளும் அரசு மறந்து விட்டதாக கூறினார். மேலும் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைமை உத்திரபிரதேசத்தின் 42 பாராளுமன்றத் தொகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று அறிவித்தது. இதையடுத்து இன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் அவர் ரேபரேலி தொகுதியில் நான்கு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வாருங்கள் அனைவரும் சேர்ந்து புது விதமான அரசியலை உருவாக்குவோம் என்று அவர் உத்தரபிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவரும் வருக கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு

பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது. இந்த தருணத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வகிக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக அமமுகவை தவிர எந்த கட்சியாக இருந்தாலும் எங்களோடு கூட்டணி சேரலாம் என அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகான அழைப்பு விடுப்பதாக இன்றைய செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.

8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

தமிழக அரசின் பட்ஜெட் வரும் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நிதி அமைச்சர் பதவி வகித்து வருகிறார் ஓபிஎஸ், கடந்த ஆண்டு மட்டும் கட்சி பிளவு காரணமாக மின்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார், ஆகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

நாடு முழுவதும் அறிமுகமானது வாக்காளர் உதவி மைய இலவச உதவி எண் “1950”

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உதவிக்கு இலவச அழைப்பு எண் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அது வேறுபட்டிருந்ததால் நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவர அரசு திட்டமிடப்பட்டது. எனவே, 1950 என்ற இலவச எண் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை டயல் செய்து உதவி பெறலாம். பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்தந்த ஊர் எஸ்.டி.டி. கோட் நம்பருக்குப் பின் 1950 என்ற எண்ணை டயல் செய்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

சோஷியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சமூக ஊடகங்களில் மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என்பது போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இத்தகைய செய்திகளைப் பரப்பும் முகம் அறியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தவும், வதந்திகளைப் பரப்புவோரை தண்டிக்க சட்டங்களை பயன்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.