Election Commission

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.

மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் 24ஆம் தேதி அறிமுகம்

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா கோயம்புத்தூரில் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடுகிறது. வருகிற 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் நிகழ்ச்சியில் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளது. அதே சமயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேரடியாக களம் காணும் என தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இயல்பாகவே வார்த்தைப் போர் நடைபெறும் சூழலில் தற்போது நேரடியாக களம் காணுவதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி

அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிமுக குறைந்தது பத்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடங்கியதா? ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்-நாகை எல்லை காணூரில் நிரந்தர செக்ஸ்போஸ்ட்டில் நேற்று காலை போலீசார் வாகனங்களில் தீவிர சோதனையிட்டனர். அப்போது கார் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல்லை – தென்காசி சாலை அத்தியூத்தில் நடந்த சோதனையில் நெல்லையில் இருந்து வந்த காரில் ரூ.20 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரஜினி ஆதரவளிப்பார் என நம்புகிறேன், கமல் பேச்சு

வருகின்ற மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலிலும் நான் போட்டியிடபோவதில்லை என அண்மையில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எனவும் கூறினார். இந்த வேளையில் ரஜினி எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக்கு நம்பிக்கையுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போகிறேன், எந்த தொகுதி என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் “இணைந்த கைகள்” சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிறகு வேறு எந்த கட்சிக்கும் உடலுறுப்புகளை சின்னமாக வழங்குவதில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் அதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. மேலும் அதைத் தொடர்ந்து விசில், பேனா, டார்ச் லைட் ஆகியவற்றில் ஒரு சின்னம் ஒதுக்கும்படி மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல்

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு தேர்தல் நடைபெறாது எனவும் தகவல்.

எப்போது தேர்தல் நடைபெறும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது இந்தியாவை பொறுத்தவரை பல கட்டமாக தேர்தல் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு என்று தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளதால் மாநில தேர்தல் அதிகாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

குக்கர் சின்னத்தை பெறுவோம் டிடிவி தினகரன் நம்பிக்கை

AMMK: நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கே உரியது எனவும் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது எனவும் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி குக்கர் சின்னத்தை பெற ஆமமுககவுக்கு உரிமை உள்ளது எனவும் நிச்சயம் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தினகரனுக்கு இல்லை, உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலைச் சின்னத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் டி டி வி தினகரன் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது, பல கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது, இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலையை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Election Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி இடத்துக்கு தற்போது சுஷில் சந்திராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தற்போது தேர்தல் ஆணையராக சுனில் அரோராவும் இரண்டு தேர்தல் ஆணையர்களாக சுசில் சந்திராவும்,அசோக் ஆகியோரும் இருப்பர்.

தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்

மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்திற்கு மேலும் இரண்டு தேர்தல் அதிகாரிகளாக பாலாஜி மற்றும் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே ஒரு தலைமை தேர்தல் அதிகாரியும் இரண்டு இணை தேர்தல் அதிகாரிகளும் உள்ளது குறிப்பிடதக்கது. இவர்களது பணிகாலம் ஓராண்டாக நிர்ணயிக்கபட்டுள்ளது, பண பட்டுவாடா போன்ற நிகழ்வுகளை தடுக்க முயற்சிக்கும் என தெரிகிறது,

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேர்தலில் போட்டியிடுவதற்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பின் கோரிக்கைகளை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பில் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் வழங்க இயலாது என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் அறிமுகமானது வாக்காளர் உதவி மைய இலவச உதவி எண் “1950”

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உதவிக்கு இலவச அழைப்பு எண் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அது வேறுபட்டிருந்ததால் நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவர அரசு திட்டமிடப்பட்டது. எனவே, 1950 என்ற இலவச எண் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை டயல் செய்து உதவி பெறலாம். பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்தந்த ஊர் எஸ்.டி.டி. கோட் நம்பருக்குப் பின் 1950 என்ற எண்ணை டயல் செய்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

TTV-க்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்

எதிர்வரும் தேர்தல்களில் குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில், குக்கர் சின்னம் பொதுவாக சின்னம் என்பதால், அமமுக கட்சிக்கு சின்னத்தை தர முடியாது என்றும் தேர்தல் நேரத்தில் தான் அம்முக கட்சிக்கு எந்த சின்னம் என்று முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சோஷியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சமூக ஊடகங்களில் மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என்பது போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இத்தகைய செய்திகளைப் பரப்பும் முகம் அறியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தவும், வதந்திகளைப் பரப்புவோரை தண்டிக்க சட்டங்களை பயன்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.