இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

PUBG Video Game Addiction Claims Danger in Indian Student Future Life

“நாம வாழணும்னா யாரை வேணாலும் எப்போ வேணாலும் கொல்லலாம்” என்று நடிகர் அஜித் பேசிய ஒரு வசனம் மிகவும் பிரபலம். ஒற்றை வரியில் சொல்லப்போனால் அந்த வசனம் தான் PUBG Mobile கேம். யார் எங்கு இருந்து எப்பொழுது சுடுவார்கள் என்று தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தன்னையோ தன் குழுவையோ நோக்கி வரும் அத்துணை ஆபத்துகளையும் கடந்து கடைசியில் உயிருடன் நிற்க வேண்டும். எந்த வினாடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்த விளையாட்டின் சஸ்பென்சே இக்கால இளசுகளை கட்டி போட்டுள்ளது.

வேடிக்கைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் விளையாட ஆரம்பித்து, பிரதமர் கலந்து கொண்ட மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில்; “என் மகன் எப்போதும் pubg விளையாடிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவனுடைய படிப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன தீர்வு?” என்று ஒரு மாணவனின் தாய் பிரதமரிடமே கேட்கும் அளவிற்கு நாட்டின் இள வயதினரின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த PUBG Mobile கேம்.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

படிப்பு பாதிக்கப்படுவது நேரம் வீணாக்கப்படுவது போன்ற வழக்கமான பிரச்சனைகளை தவிர உளவியல் ரீதியாகவும் பல அபாயமான விளைவுகளை இந்த கேம் விளைவிக்கக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். “அவனை கொல்லு; சுட்டு தள்ளு; கத்தியால் குத்து” போன்ற வசனங்களை இந்த கேம் விளையாடுபவர்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்கலாம். இது நாளடைவில் ஒருவரின் மனதில் மனிதாபிமானத்திற்கான இடத்தை குறைத்து வன்முறையை விதைக்கிறது.

விளையாட்டிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான கோடு மங்கிப்போகிறது. இதன் விளைவாக சுற்றி இருப்பவர்களின் மீது எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கை ஓங்குவது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற நடத்தை மாறுதல்கள் ஏற்படுகின்றன. டெல்லியில் PUBG Mobile Game விளையாட விடாமல் பெற்றோர்கள் தடுத்ததால் தன் குடும்பத்தையே கல்லூரி மாணவன் ஒருவன் கொலை செய்த செய்தி நாட்டையே உலுக்கியது.

பல கதைகளில் ஒரு கதை:

சூரஜ்(19) என்பவர் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் டெல்லியில் வசித்து வந்துள்ளார். படிப்பில் ஆர்வமில்லாத அவர் தனியே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து கல்லூரிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் PUBG Mobile Game விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது தெரியவந்த அவரது பெற்றோர் அவரை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த சூரஜ் ஒருநாள் இரவோடு இரவாக தனது பெற்றோர் மற்றும் தங்கையை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொன்றுள்ளார்.

இது பற்றி அவரது உறவினர்களிடம் விசாரித்த பொழுது, “இயற்கையில் சூரஜ் அமைதியான குணம் கொண்டவர் என்றும் நாளடைவில் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் அடிக்கடி அவர்களது வீட்டில் கூச்சலும் குழப்பமுமாக இருந்து வந்தது” என்றும் கூறினர்.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

இந்த விளையாட்டு கொண்டு வரும் விபரீதங்கள் பற்றி புரிந்து சீனா இந்த விளையாட்டை தடை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள முதன்மையான தனியார் கல்லூரிகளில் ஒன்றும் இந்த விளையாட்டை தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரமயமாகி கொண்டிருக்கும் இவ்வுலகில் மனிதாபிமானம் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது. நிஜ வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தான் விளையாட்டுகள் தோன்றின. ஆனால் தற்போது அத்தகைய ஒரு விளையாட்டே குற்றங்களுக்கான காரணியாக மாறிப்போயிருப்பது மனித மனங்கள் எவ்வளவு வலுவிழந்து போய்விட்டன என்பதை விளக்குகிறது.

ஒரு விளையாட்டிற்காக தனது சொந்தங்களையும் சுற்றத்தாரையும் ஒருவன் வெறுப்பானேயானால் அப்படி ஒரு விளையாட்டு தேவையா? யோசித்து பார்க்க வேண்டும் இளைய தலைமுறை.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?